போலீஸ் அதிகாரிகள் ஆதரவுடன் கள்ள சாராயம் விற்பனை- குடிமகன்கள் கொண்ட்டாட்டம்!

sarayam1

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சுற்றி திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் தாலுகா, ஏலகிரிமலை உள்ளிட்ட 5 காவல்நிலைய கட்டுப்பாட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் மலைகிராமங்களான புதூர்நாடு, சேம்பரை, நெல்லிவாசல்நாடு,  ஆகிய பகுதிகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை லாரி டியூப்களில் திருப்பத்தூர் அடிவார பகுதிகளான ஏலகிரி கிராமம், பொம்மிகுப்பம், மண்டலவாடி குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் சப்ளை செய்கின்றனர். அதேபோல திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி, மடவாளம், கந்திலி செவ்வாத்தூர் காக்கங்கரை அச்சமங்கலம்  ஜோலார்டேப்டை உள்ளிட்ட  பகுதிகளில் வெளிமாநிலங்களிலிருந்து எரிசாராயம் கொண்டு வந்து கேன்களில் வைத்து தண்ணீர் கலந்து விற்பனை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் சப்டிவிஷனில் உள்ள 5 காவல்நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசாரும் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் உள்ளனர். ஆனால், எந்த போலீசாரும் கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்வதும் கிடையாது. இதனால், கிராமப்புற மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் கிராமங்களில் கள்ளச்சாராயத்தை கடத்துவதால் சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்று அரசு மற்றும் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு உத்தரவிட்டாலும், அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருப்பத்தூர் பகுதியில் மட்டும் அதிகளவில் கள்ளச்சாராய விற்பனை போலீசாரின் ஆதரவோடு படுஜோராக நடைபெறுகிறது.

sarayam2

மலையடிவார பகுதிகளிலும், விவசாய நிலத்தின் மையப்பகுதிகளிலும் பல்வேறு ரசாயன பொருட்கள் கலந்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். மேலும், டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு தான் திறக்கும். ஆனால் திருப்பத்தூர் பகுதியில் 24 மணிநேரம் மொபைல் சர்வீஸ் மூலமாகவும், வீடுகளில் பதுக்கி வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.  இதுகுறித்து சாராய வியாபாரிகளிடம் கேட்டால், போலீசாருக்கு மாமூல் கொடுத்து தொழிலை நடத்துகிறோம் என்று பகிரங்கமாக கூறுகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாதந்தோறும் காவல் நிலையத்திற்கு 30 ஆயிரம் வரை செலவாகிறது.

sarayam

குறிப்பாக காவல்நிலையத்தில் தூய்மை படுத்துவதற்கும், கணினி பழுதுபார்த்தல், இதர செலவுகளுக்கும், வாகனம் பழுது பார்க்க நாங்கள் இதை பயன்படுதுகிறோம். எங்கள் குடும்ப செலவிற்கு கொண்டு செல்வதில்லை’ என்று தெரிவித்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் போலீசார் சாராய வியாபாரியை மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த சாராய வியாபாரி உயரதிகாரிகளுக்கு அவர்கள் பேசியதை வாட்ஸ்அப்பில் அனுப்பியதால், இடமாற்றம் மற்றும் போலீசாரை பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Response