ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றால் போட்டியிடுவது உறுதி என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ் சசிகலா அணி இரட்டை இலைக்கு மோதியதால் சின்னத்தை முடக்கியது. 7 மாதங்களுக்குப் பின்னர் அதிமுக கட்சி, கொடி, சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதி என்று டிடிவி தினகரன் அணி ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
வெற்றிச்சின்னமான தொப்பிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி என்றும் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். துரோகிகளை மையமாக வைத்து தங்களின் பிரச்சாரம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணி நாங்கதான், துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தான். போட்டியிடுறோம், ஜெயிக்கிறோம். இரட்டை இலையை மீட்போம் என்றுத் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அதிமுக அம்மா அணி சார்பில் தொப்பிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் கூறியுள்ளார் தங்க தமிழ் செல்வன்.