சசிகலா குடும்பம் தான் ஆள வேண்டுமா? முதல்வர் பழனிசாமி கொந்தளிப்பு

Edapadi_Palanisamy
அ.தி.மு.க., சசிகலா அணியில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனை, ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்ப்பாளராக கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி முடிவெடுத்து அறிவித்துள்ளது.
இதற்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, அக்கட்சியினர் கூறியதாவது: அ.தி.மு.க.,வை சசிகலா தன் குடும்பச் சொத்தாக்கப் பார்க்கிறார் என்பதுதான், ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியினர், சசிகலா தரப்பினர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. தி.மு.க.,வின் தலைவர் கருணாநிதி, அக்கட்சியை தன் குடும்பச் சொத்தாக மாற்றி விட்டார் என்று, அ.தி.மு.க.,வினர் அனைவரும் விமர்சித்த நிலையில், அதே நிலைமைதான் அ.தி.மு.க.,விலும் ஏற்படுத்தப்படுகிறது.

இதைகூட இலை மறை காய் மறையாக வைத்திருக்காமல், அ.தி.மு.க.,வை கட்டிக்காத்தது நாங்கள்தான். அதனால் குடும்ப அரசியல்தான் செய்வோம் என்று, தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில், சசிகலாவின் கணவர் நடராஜனும், தம்பி திவாகரனும் பேசினர். இந்நிலையில், சசிகலாவே, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆனார். அடுத்ததாக, முதல்வராக முயற்சித்தார். ஜெயிலுக்கு போக வேண்டியிருந்ததால், அது நடக்கவில்லை. ஜெயிலுக்குப் போன பிறகும் கூட, கட்சியை நிர்வகிக்க, வேறு யாருக்கும் பொறுப்பு கொடுக்கவில்லை. ஜெயிலிலும் பொதுச் செயலராகவே தொடர்கிறார். அங்கிருந்தபடியே, கட்சியையும், ஆட்சியையும் கண்ட்ரோல் செய்கிறார்.

இங்கிருந்து கட்சியை நடத்த, கட்சியில் இருந்தே நீக்கி வைக்கப்பட்டிருந்த, தினகரனை, உடனடியாக கட்சியில் சேர்த்து, அவரை, கட்சியின் துணைப் பொதுச் செயலராக நியமித்துள்ளார். தற்போது, அவரையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளராகவும் அறிவிக்கச் செய்துள்ளார். அடுத்தகட்டமாக, எடப்பாடி பழனிச்சாமியை, முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் தினகரனை நியமிக்க வைப்பதுதான், சிறையில் இருக்கும் சசிகலாவின் திட்டம்.

இப்படித்தான், ஒவ்வொரு விஷயத்திலும், திட்டமிட்டு குடும்ப அரசியல் செய்து வருகிறார் சசிகலா. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வேட்பாளராக்கப்பட்டதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிலை குலைந்து போயிருக்கிறார். காரணம், தினகரன் வெற்றி பெற்றால், முதல்வர் நாற்காலியை குறி வைப்பார். அதற்காக, பழனிச்சாமியை கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்துவர்.

அப்படியொரு நிலை தனக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பழனிச்சாமியும், தனக்கு நெருக்கமான, அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம், வலுவான சில வேலைகளை துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Response