பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார் டிடிவி தினகரன். அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்எல்ஏக்களும் சசிகலாவை சந்தித்து பேசி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாகவே அமமுகவில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு அமமுகவில் நிறைய சிக்கல்கள் அணி வகுத்து வருகின்றன.
மேலும் சிலர் அமமுகவிலிருந்து பிரிந்து செல்லக்கூடும் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 9 பேர் சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சந்திக்க போவதாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
அதேபோல, டிடிவி தினகரனும் சசிகலாவை நேரில் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது. இதனிடையே தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்ட 9 பேரும் ஒகேனக்கல் ரிசார்ட்டில் தங்கி இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தங்க.தமிழ்செல்வன், டிடிவி தினகரன், சசிகலாவை விட்டு தாங்கள் ஒருபோதும் செல்ல மாட்டோம் என்று உறுதியாக கூறியிருந்தார்.
இந்நிலையில்தான், டிடிவி தினகரன் உள்ளிட்ட 11 பேரும் தற்போது சிறையில் சசிகலாவை சந்தித்து வருகின்றனர். இதை தவிர விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வனும் இந்த சந்திப்பில் இடம் பெற்றுள்ளார்.
அமமுகவில் ஏற்பட்டுள்ள சிக்கல், மற்றும் கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ள போகும் நடவடிக்கைகள், வரப்போகும் தேர்தலில் கூட்டணி உள்ளிட்டவைகள் குறித்து கசசிலாவிடம் 11 பேரும் ஆலோசனைகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.