இன்று 5 ஆம் கட்ட விசாரணையில் இரட்டை இலை சின்ன விவகாரம்! இன்றாவது தீர்ப்பு உறுதியாகுமா ?

twoleaves_16236_09233
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று 5 ஆவது கட்ட விசாரணை

தேர்தல் கமி‌ஷனால் முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் போராடி வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷனில் இதுவரை 4 கட்டங்களாக விசாரணை நடந்துள்ளது. 5–ம் கட்ட விசாரணை இன்று நடைபெறுகிறது. இந்த விசாரணைக்காக இரு அணிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் டெல்லிக்கு வந்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று காலை 10 மணிக்கு அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சசிகலாவின் சகோதரர் திவாகரனும் காலை 11 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

டி.டி.வி.தினகரன் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் டெல்லி வந்தார். சொந்த வேலை மற்றும் நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்ததாக அவர் தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமி‌ஷனில் இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் இவர்கள் இருவரும் டெல்லிக்கு வந்து முகாமிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response