வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 19ம் தேதி புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதால், அந்த நேரத்தில் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். தீபாவளி மறுநாள் வரை மழை அதிகமாக பெய்யும் என்பதால் விற்பனை பாதிக்கும் என வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 29 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. இதனால் குறிப்பிட்ட சில மாவட்டங்களை தவிர, பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது. இருப்பினும் ஓடை, கால்வாய் மற்றும் ஏரி, குளங்களை சரிவர அரசு தூர்வாராதது, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணங்களால் அதிக மழை பெய்தும் நிலத்தடி நீர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வழக்கமாக, அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதன்படி, இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் இயல்பைவிட 111 சதவீதம் அதிகம் மழை கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது இன்று அல்லது நாளை மேலும் வலுப்பெற்று வரும் 19ம் தேதி தெற்கு ஓடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக ஆந்திரா கடலோர மாவட்டங்கள் மற்றும் ஓடிசா பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்க கடலில் புயல் சின்னமாக மாற அதிகம் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சமயத்தில் வங்க கடலில் புயல் உருவாகவும் அதிகம் வாய்ப்பு உள்ளது. ஓடிசா மற்றும் ஆந்திரா பகுதிகளில் அதிக மழை கொட்டும். அதேசமயம், காற்றின் சுழற்சி தமிழகம் நோக்கி நகர்ந்தால் இந்த புயல் சின்னத்தால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்ட வாய்ப்புள்ளது. குறிப்பாக தீபாவளியன்று மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பில், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி விற்பனை பாதிக்கும் என வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தீபாவளி விற்பனை தற்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்பு ஒரு வாரம், 10 நாட்களுக்கு முன்னதாக விற்பனை சூடுபிடித்து விடும். ஆனால் கடந்த 2 நாட்களாகத்தான் தமிழகத்தில் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சனி, ஞாயிறு விற்பனை அதிகமாக இருந்தது.
தி.நகர், அண்ணாநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அந்த வழிகளை கடப்பதற்கே பல மணி நேரம் ஆனது. தீபாவளி பண்டிக்கை நாளை கொண்டாடப்படுவதால், இன்று விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னையில் நேற்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மழை பெய்தது. பிற்பகல் 3 மணிக்கு மேல், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால், பட்டாசு உள்பட தீபாவளி பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டது.