கன்னியாகுமரி கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களை துவம் செய்துவிட்டு, கேரளவை புரட்டி எடுத்தது. இந்நிலையில், அடுத்த புயல் 6-ந்தேதி வங்கக்கடலில் உருவாகி இருக்கிறது. இது தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
தென் கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவான தீவிர காற்றழுத்த பகுதியானது நேற்று காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு சுமத்ரா தீவு கடற்கரை வரை பரவி நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) தீவிரம் அடைந்து அடுத்த 3 அல்லது 4 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும், இதனால், மிக கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில், சிலர் பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டி சென்னை மழை வெள்ளத்தில் மூழ்கும் என்றெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது-
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது, இதனால், தமிழகத்துக்கு பாதிப்பும் இல்லை. அதிகமாக பரபரப்பு ஏற்படுத்தியது எல்லாம் வீணாகிவிட்டது. வங்கக்கடலில் உள்ள சூழல் புயல் உருவாவதற்கு எதிராகவே இருக்கிறது.
இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாககூட வலுப்பெறலாம். ஆனால், புயலாக மாறுமா என்பதே சந்தேகம். அதுமட்டுமல்ல, நம் தமிழகத்துக்கு அருகே வருமா என்பது கூட சந்தேகம்தான்
வங்கக்கடலில் அதிகமாக உருவாகி இருக்கும் மேகக்கூட்டங்கள், மறு நாளே கலைந்துவிடலாம். ஆனால் எந்த மேகக்கூட்டமும் அவ்வளவு எளிதாக கலைந்துவிடாது.
மீனவர்கள் கடலுக்குள் செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வடக்கு தமிழக கடற்கரை, ஆந்திரா கடற்பகுதிகுள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
நம்முடைய இந்திய வானிலை மையம் புயல் குறித்த கண்ணோட்டத்தை, கணிப்பை இன்று அல்லது நாளை மாற்றிக்கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு இந்த காற்றழுத்த தாழ்வுபகுதியால், அதிகமான மழை இல்லை என்பது தெரிந்துவிட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.