திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ளது கிழக்குறிச்சி. அந்த ஊரை ஒட்டியுள்ள கீழகண்டார்கோட்டை, கீழக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
அப்பெண்கள், கீழக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் மற்றும் உதவியாளர் மகாலெட்சுமி, கிராம வறுமை ஒழிப்பு நிர்வாகிகள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே விலையில்லா ஆடுகள் வழங்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.
அப்போது பேசிய செல்வி:-
“எனது மகள் வனிதா வாழாவெட்டியாக வீட்டோடு வந்துவிட்டார். அவரையும் அவரது குழந்தையையும் மிக சிரமப்பட்டு காப்பாற்றி வருகிறேன். இந்நிலையில், வனிதா ஆடு கிடைத்தால் உதவியாக இருக்கும் என மனுக்கொடுத்தார். ஆனால், எங்களுக்கு ஆடு இருப்பதாகவும், நாங்கள் வசதியாக உள்ளோம் எனக் கூறி நிராகரித்துவிட்டார்கள்.
இதுகுறித்து கேட்டதற்கு, கிராம உதவியாளர் மகாலட்சுமி மற்றும் வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர் வாசுகி ஆகியோர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஆடு உண்டு. இல்லை என்றால் வி.ஏ.ஓவின் இச்சைக்கு ஒத்துழைக்கவேண்டும் எனக் கூறுகிறார்கள்” என்றார்.
இறுதியாகப் பேசிய செல்வராணி:-
“எங்கள் ஊருக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களில் தகுதியான 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் ஊரில் மட்டும், தேவையானர்கள், வசதிபடைத்தவர்கள், பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் ஆடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தகுதியுள்ள 30க்கும் மேற்பட்ட விதவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த திட்டத்தில் பயனடைய வேண்டுமானால், ஆயிரம் ரூபாய் பணமும், ஒரு ஆடும் கொடுக்கணும் என்று வி.ஏ.ஓ. அன்பழகன், மகாலெட்சுமி மற்றும் வாசுகி ஆகியோர் பேரம் பேசுகிறார்கள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்கள்.