வங்கக்கடலில் உருவாகும் என கூறப்பட்டுள்ள புதிய புயல் வடக்கு கடலோர மாவட்டங்களை தாக்க கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் கடலூர் மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர். வானிலை ஆய்வு மைய அறிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 40 பேர் கடலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். புயல், மழை ஏற்பட்டால் அதனை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகளை கடலூர் மாவட் நிர்வாகமும் செய்து வருகிறது.
கடலூர் மக்களை இன்றும், நாளையும் வெளியே வர வேண்டாம் என தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் எச்சரித்துள்ளார். இதனால் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாவிட்டாலும் கூட மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. 2011-ல் ஏற்பட்ட தானே புயல் கடலூரையே புரட்டி போட்டது. அடுத்தடுத்து கோர தாண்டவம் ஆண்டிய நீலம் மற்றும் வர்தா புயல்களுக்கும் கடலூர் தப்பவில்லை. 2015-ல் கனமழை கடலூரை மூழ்கடித்தது. தற்போது ஏற்பட்ட ஒக்கி புயலால் ஆங்காங்கே கனமழையும் பெய்துள்ளது. அதனால் தற்போதைய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு மக்களிடையே எச்சரிக்கை உணர்வை அதிகரித்துள்ளது.