3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அந்தமான் கடல் பகுதியில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை, தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னை நகரில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர், ஆவடி, உள்ளிட்ட இடங்களிலும் நேற்றிரவு நல்ல மழை பெய்து வருகிறது.

இதை தொடர்ந்து, நாளை மறுநாள் டிசம்பர் 6 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,”தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் அன்று தென்தமிழகம் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது” என்று தெரிவித்துள்ளது. இன்று தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Response