சென்னையில் விடிய விடிய மழை : இன்றும் மிக கனமழை கொட்டித் தீர்க்குமாம்..!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அண்மையில் வீசிய கஜா’ புயல் டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் நல்ல மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த 18-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் , தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது .

வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது . இதன் காரணமாக இன்றும் , நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது .

வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது . சென்னையின் முக்கிய இடங்களான கோடம்பாக்கம் , சென்ட்ரல் , எழும்பூர் , அடையாறு , தரமண உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது .

இதுபோல் தாம்பரம் , மீனம்பாக்கம் , ஆலந்தூர் , கிண்டி , வடபழனி , கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது . இதே போல் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொடி வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் இன்று வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் பலத்த மழை பெய்யும் எனவும், வட தமிழகத்தில், அதாவது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response