தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு அரங்கத்தில் நடந்து வருகிறது.
இதில், நாடு முழுவதும் இருந்து 950 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியின் 2–வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனையான அர்ச்சனா 11.78 வினாடியில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு தமிழக வீராங்கனையான சந்திரலேகா 11.92 வினாடியில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கமும், கர்நாடக வீராங்கனை பிரஜ்னா பிரகாஷ் 11.92 வினாடியில் இலக்க கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் இரயில்வே வீராங்கனை பூர்ணிமா ஹேம்ப்ராம் 13.89 வினாடியில் இலக்கை கடந்து தங்கப் பதக்கமும், ஜார்கண்ட் வீராங்கனை அனுருபா குமாரி வெள்ளிப் பதக்கமும், இரயில்வே வீராங்கனை சோமியா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மேற்கு வங்காள வீராங்கனை சோனியா பாய்சா 53.98 வினாடியில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தையும், கர்நாடக வீராங்கனை விஜயகுமாரி வெள்ளிப் பதக்கத்தையும், ஓ.என்.ஜி.சி. வீராங்கனை ஜானா முர்மு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அதேபோன்று, 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மராட்டிய வீராங்கனை அர்ச்சனா தங்கப் பதக்கமும், இரயில்வே வீராங்கனைகள் மோனிகா சௌத்ரி வெள்ளிப் பதக்கமும், பிரமிளா யாதவ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.