நாகப்பட்டின மீனவர்கள் இடையே மோதல்… 3 படகுகளுக்கு தீவைப்பு!

bot 2
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களுக்கிடையே பழைய மற்றும் புதிய மீன்பிடித் துறைமுகங்களை பயன்படுத்துவதில் பிரச்சனை இருந்துள்ளது.

அண்மையில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு மீனவர்களும் அரிவாளால் வெட்டிக் கொண்டதில், படுகாயமடைந்த 6 பேர் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் நின்றிருந்த 3 படகுகளுக்கு இரு தரப்பினை சேர்ந்த சிலர் தீ வைத்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்ததால் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே, (ஞாயிற்றுக்கிழமை) நேற்று இரவு நாகை மருத்துவமனையில் திரண்ட இரு கிராம மக்களும் ஒருவரைக்கொருவர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலையில் நாகை பேருந்து நிலையத்தை, 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு, எதிர்த்தரப்பினரை கைது செய்யக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். மீனவர்கள் மோதல் தொடர்பாக 117 மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a Response