அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு சார்ந்த இலவச பயிற்சி-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்..!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சி.ஏ. படிப்பு சார்ந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தேர்ச்சி அதிகரிக்கும் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- நீட் தேர்வில் 2017-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 73 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 28 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

2018-ம் ஆண்டில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் தேர்வு எழுதியதில் 45,336 பேர் (40 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11-ம் வகுப்புகளில் நீட் தேர்வு தொடர்பான பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் வருங்காலத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டுதான் பல முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. மற்றவர்களைபோல் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவில் முதல் முறையாக பட்டய கணக்காளர் படிப்பு தொடர்பான பயிற்சி மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 500 பயிற்சியாளர்கள் அமர்த்தப்பட உள்ளனர். இதற்காக இந்திய பட்டய கணக்காளர் கழகத்துடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சி.ஏ. படிப்பு சார்ந்த பயிற்சி அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வணிக பாடம் சார்ந்த மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response