“எங்கள் அனுமதியின்றி போயஸ் கார்டனை நினைவிடமாக மாற்ற முடியாது!” – ஜெ. தீபா அறிவிப்பு

deepa97
போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் எங்களது பூர்வீக சொத்து. அதை யாரும் வாங்கவோ, விற்கவோ முடியாது என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் நிறுவனர் தீபா நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து தீபா செய்தியாளர்களிடம் நேற்று பேசியதாவது:-

மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் எங்களது பூர்வீக சொத்து. அதனை யாரும் வாங்கவோ விற்கவோ, வேறு யாருக்காவது மாற்றித் தரவோ முடியாது. தமிழக முதல்வர் இப்படி அறிவித்திருப்பது ஆச்சர்யமாகவும் கேள்விக்குறியாகவும் இருக்கிறது. இதனை எதிர்த்து நான் வழக்கு தொடர்வேன். இதனை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. அந்த இடத்திற்கு உரியவர்கள் நாங்கள்.

அந்த இடத்தைப் பராமரிக்கவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை மற்றும் அவரது பாரம்பரியத்தை பாதுகாப்பது எனது கடமை. ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக முதல்வர் அறிவிப்பதற்கு முன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே போயஸ் இல்லம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று தீபா கூறியுள்ள நிலையில் இன்று ஜெ., அண்ணன் மகன் தீபக், அந்த வீடு தங்களுக்கு தான் சொந்தம் அதை நினைவிடமாக மாற்றக் கூடாது என முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீடு எனக்கும், எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எழுதிய உயிலின் படி அந்த வீடு வாரிசுகளான எங்களுக்கே உரியது. எங்களின் ஒப்புதல் இல்லாமல் நினைவிடமாக மாற்ற நினைப்பது சட்டப்படி குற்றம். நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும். போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response