”நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா?” கேரள எம்.எல்.ஏ.விடம் பிரபல நடிகை கேள்வி

rape2270140f
தன்னை பற்றி மோசமான கருத்துகளைக் வெளியிடும் எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முன்னணி நடிகை ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகை ஒருவரை கடந்த பிப்ரவரி 17-ம் தேதி ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல்ரீதியாக துன்புறுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் திடீர் திருப்பமாக மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கடத்தல் வழக்கு விவகாரத்தில் பூன்ஜார் தொகுதி எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ், அவ்வப்போது நடிகைக்கு எதிராக கருத்துகளைக் கூறி வருகிறார்.

அண்மையில் அவர் கூறியதாவது:-

“பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக நடிகை கூறுகிறார். அப்படியிருக்கும் போது அடுத்த நாளே அவர் எப்படி படப்பிடிப்பில் பங்கேற்றார்” என்று கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக சம்பந்தப் பட்ட நடிகை முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நான் நினைத்ததுகூட கிடையாது. ஆனால் கடந்த சில நாட்களாக எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் என்னை பற்றி மிக மோசமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

எனக்கு நேர்ந்த கொடுமைக்குப் பிறகு சில மாதங்கள் நான் அனுபவித்த மனவேதனையை விவரிக்கவே முடியாது. நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். இதுபோன்ற சம்பவங்கள் என்னை மிக ஆழமாகக் காயப் படுத்துகின்றன. துவண்டுவிடக் கூடாது, துணிந்து போராட வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகிறேன்.

எம்எல்ஏ ஜார்ஜ் போன்றவர்கள் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களா? இல்லை மனநல மருத்துவமனையில் அடைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களா?. இல்லை சமுதாயத்தின் பார்வையில் படாமல் எங்காவது ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களா?

நான் அவர் சொல்வதுபோல் உடனடியாக படப்பிடிப்புக்குச் செல்லவில்லை. 10 நாட்களுக்குப் பிறகு நண்பர்கள், சக நடிகர்கள் அளித்த ஊக்கம், ஆக்கத்தினால்தான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்றேன்.

கேரள மகளிர் ஆணையம் குறித்தும் பி.சி.ஜார்ஜ் எதிர்மறை யாக விமர்சனம் செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான பெண்களின் நம்பிக்கை மையமாக விளங்கும் ஆணையத்தின் மதிப்பை அவர் கெடுக்கிறார்.

இந்தப் பிரச்சினையை இப் போது உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருப்பதால் எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Leave a Response