தூத்துக்குடி கடல் பகுதியில் மணல் அரிப்பு- மீனவர் படுகாயம்!

thuth1

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் 400க்கும் அதிகமான நாட்டுப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள கடலில் சீற்றம் ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில், தமிழக அரசு சார்பில் ரூ.25 கோடியில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

சாத்தான்குளம், பெரியதாழை பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெரியதாழை பகுதியில் பெய்த கனமழையால் கடற்கரை அருகில் அமைக்கப்பட்ட தார் சாலை மணல் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் தோன்றியது. கடற்கரையில் நிறுத்தியிருந்த 5 படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. மீனவர்கள் கடலுக்குள் சென்று படகை மீட்டனர். அப்போது பெரியதாழையைச் சேர்ந்த ராஜ் மகன் சேகர் (35), காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திசையன்விளை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடற்கரையில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும்நிலை ஏற்பட்டது.

 

thuththukuti

இதுகுறித்து மீனவர்கள் சாத்தான்குளம் தாசில்தார் ராஜூவ் தாகூர் ஜேக்கப்பிடம் புகார் செய்தனர். நேற்று தாசில்தார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சேகர், ஆர்ஐ பிரபு, விஏஓக்கள் சுடலைவடிவேல் ஆகியோர் மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர். அப்போது பெரியதாழை பங்குதந்தை செல்வன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மனோகரன் உள்ளிட்ட மீனவர்கள், மணல் அரிப்பால் படகுகள் கரையில் விடுவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மணல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊருக்கு கிழக்கு, மேற்கில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட மணல், திட்டுபோல் காணப்படுகிறது. அதனை எடுத்து மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க வேண்டும். பெரியதாழை குடியிருப்பு பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென முறையிட்டனர்.  கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார்.

Leave a Response