வருமான வரித்துறை சம்மனை எதிர்த்து கீதாலட்சுமி வழக்கு…

geethalakshmi
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் கடந்த 7-ம் தேதியன்று, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த ஆவணங்களில், குறிப்பாக, ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கான வரவு செலவு கணக்குகளும் அடங்கியிருந்தது.

இதனையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர், இன்று நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர்.

ஆனால், இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி மட்டும் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வருமானவரித்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றதில் கீதாலட்சுமி மனு அளித்துள்ளார். அதில், தனது வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. ரொக்கம் கைப்பற்றப்படவில்லை. வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனில் எது தொடர்பாக விசாரணை நடத்தப் போகிறோம் என முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என கீதாலட்சுமி குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Response