சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் இணையும் சரத்குமார்..!

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான “தயாரிப்பு எண் 3” உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை ‘சலீம்’ வெற்றிப்படத்தை இயக்கி, தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்த என்.வி.நிர்மல்குமார் இயக்க, சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் சாகச பொழுதுபோக்கு படமான இந்த படத்தின் ஒவ்வொரு அம்சமும், படத்தை முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு கொண்டு செல்வதோடு, சசிகுமார் நடித்த முந்தைய படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. குறிப்பாக, அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆடம்பரமான மும்பை மாநகரத்தில் தொடங்குகிறது, மேலும் சரத்குமார் இதில் கலந்து கொண்டு நடிப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்டபடியே, எல்லா வேலைகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும், நிலையான வேகத்திலும் தொடர்ந்து நடக்கின்றன. நிர்மல்குமாரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் இல்லை என்றால், இது நிச்சயம் சாத்தியமல்ல. முக்கிய நடிகர்கள் நடிக்கும் படத்தை எந்த கால தாமதமின்றி குறித்த நேரத்தில் நிறைவு செய்யும் ஒரு இயக்குனர் அமைவது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் பேரின்பம். எங்கள் படம் உருவாகி வரும் விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. சரத்குமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவர் இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், இந்த படத்தில் அவரின் புதிய தோற்றம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஜூன் 6ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 25 நாட்கள் நடக்கிறது. இந்த மும்பை மாநகரத்தின் அழகிய இடங்களில் சில முக்கியமான காட்சிகளை படமாக்க இருப்பதால், இந்த கட்ட படப்பிடிப்பு உண்மையில் முக்கியமானதாக இருக்கிறது” என்றார்.

சரத்குமார் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கேட்டால், “வழக்கமாக, படக்குழுவினருக்கு ஒரு தயாரிப்பாளர் போடும் மிக கடுமையான விதி, படத்தை பற்றிய எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்பது தான், அதை நானே மீறக்கூடாது. ஆனால் படத்தில் அவரை பார்க்கும் பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

குறிப்பாக, சரத்குமார் – சசிகுமார் என்ற ஒரு வழக்கத்துக்கு மாறான, அழுத்தமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டணி, அனைவரின் கவனத்தையும் திருப்புகின்றன. ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிக ஆர்வத்துடன் உள்ளனர், இது ஒரு தயாரிப்பாளராக எனது தன்னம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கிறது” என்றார்.

கணேஷ் சந்திரா (ஒளிப்பதிவாளர்), ஆனந்த் மணி (கலை) மற்றும் சக்தி சரவணன் (நடனம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Leave a Response