ஸ்டாலினுக்கு முதல்வர் என்று பெயர் பொறித்த இருக்கையை வாங்கிகொடுங்கள் – சரத்குமார்..!

பதவி ஆசையில் இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முதல்வர் என்று பெயர் பொறித்த இருக்கையை வாங்கிகொடுங்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.

திருப்பரங்குன்றனம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் நேற்று இரவு அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் இணைந்து தனக்கன்குளம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய சரத்குமார், பதவி ஆசையை நோக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், யாராவது அவருக்கு முதலமைச்சர் என்று பெயர் பொறித்த இருக்கையை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் விமர்சித்தார்.

திமுக ஊழல் மிகுந்த அராஜகம் மிகுந்த ஆட்சியை நடத்தியதாகவும், அவர்கள் மீண்டும் வந்துவிடலாம் என்ற கனவை நீங்கள் தகர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு சரத்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒருநாளில் 20 மணி நேரம் உழைத்ததாகவும், எதிர்க்கட்சிகள் மக்களை காசு கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும், தமிழ்நாட்டு மக்கள் எந்த நிலையிலும் கையேந்தக்கூடாது என்றும் செல்லூர் ராஜு வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Response