தமிழ் மொழியை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது – அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கு..!

தமிழ் மொழியை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்‌பட்டது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழி கூடுதலாக கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மும்மொழிக் கொள்கைக்கு மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: பிற மாநிலங்களில் தமிழ் பாடத்தை 3-வது மொழியாக அறிவிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து உள்ளார்.

ஆனால் தி.மு.க.வினர் அதனை மாற்றி தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்து மக்களிடம் பொய் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதன்மூலம் மு.க.ஸ்டாலின் பித்தலாட்ட அரசியலை செய்து வருகிறார். அவர்கள் தமிழ் மொழிக்காக எதையும் செய்யவில்லை. தமிழை வைத்து அவர்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் என்று கடுமையாக பேசினார்.

நீட் தேர்வுக்கு எதிராக கடைசி வரை போராடிய மாநிலம் தமிழகம் தான். இன்றைக்கும் நீட் வேண்டாம் என்ற நிலைபாட்டில் தான் நாங்கள் உள்ளோம். தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது என்றும் கூறினார்.

இதே போல், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை இந்தியை மட்டுமே சார்ந்தது என தமிழகத்தில் தவறான புரிதல் உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response