வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் இளயராஜா உடல் இராணுவ மரியாதையுடன் இன்று தகனம்

ilaya 2
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷோஃபியான் மாவட்டத்தின் ஜைனாபோரா பகுதியில் அவ்னீரா கிராமத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, இளயராஜா (25), கவாய் சுமேத் வாமன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். உயிரிழந்த இளயராஜாவின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டணி கிராமமாகும். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவரது மரணச் செய்தி கேட்டுப் அவரது தாய் மீனாட்சி மற்றும் மனைவி செல்வி ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இவரது இரங்கல் செய்தி இன்னும் அவரது தந்தை பெரிய சாமிக்கு தெரியவில்லை.

மேலும் செல்விக்கும் இளயராஜாவுக்கும் திருமணம் ஆகி 11 மாதங்களே ஆவது குறிப்பித்தக்கது, செல்வி தற்போது
4 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 20 நாள்களுக்கு முன்பு கண்டணிக்கு வந்த இளயராஜா குடும்பத்தினருடன் இருந்துவிட்டு சமீபத்தில் காஷ்மீர் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மரணச் செய்தி குடும்பத்தினர் மட்டுமின்றி கிராமத்தினரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மரணமடைந்த இளயராஜா மற்றும் சுமேத் வாமன் ஆகியோரின் உடல் காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கு ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதன் பிறகு அவரது உடல் அவரின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் கண்டணிக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது வீரமரணமடைந்த இளையராஜாவின் உடல் இராணுவ மரியாதையை செய்யப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்பட்டது.

Leave a Response