அம்மாவின் இடத்தை யாருக்கும் தாரைவார்க்க மாட்டோம் ஜெயக்குமாரின் அதிரடி அறிவிப்பு!

jayakumar

அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை என்றும் அதிமுகவின் 2 அணிகள் இணைவது பற்றி விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, பட்டினப்பாக்கத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அதிமுகவின் 2 அணிகள் இணைவது பற்றி விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது அணிகள் இணைப்பு செயல்வடிவம் பெற்றுள்ளது. ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.

குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் வருவது சகஜம்தான். விரைவில் ஒன்றுபடுவோம். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் இணைப்பு குறித்து சாதகமாக பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.

டிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தே ஆட்சி நடைபெறுகிறது. அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை.

கிடைத்ததை சுருட்டி செல்ல பார்க்கிறார்கள் என்று கூறிய டிடிவி தினகரன் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானங்களை அனைவரும் படித்து பார்த்தே கையெழுத்திட்டனர்.

அதிமுக துணை பொது செயலாளராக தினகரனை நியமித்தது செல்லாது. அதுபோல் தினகரனின் நியமனங்களும் செல்லாது. எந்த சூழ்நிலையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்துவிடக் கூடாது. டிடிவி தினகரன் தலையீடின்றி கட்சியும் ஆட்சியும் சிறப்பாக செயல்படுகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவேன் என்று கூறிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை தினகரன் எதிர்த்திருக்க வேண்டும். திமுக கருத்தை ஆதரித்தது தினகரன் செய்த துரோகம்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாட நாங்களே தகுதி படைத்தவர்கள். அது இனியும் நடைபெறும். இவ்வாறு கூறினார்.

Leave a Response