சிவகங்கையில் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்…

சிவகங்கையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய கோரி பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த பல நாள்களாக நகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் சரிவர விநியோகம் இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தொட்டிகளும் (சின்டெக்ஸ்) பழுதடைந்து செயல்படாமல் உள்ளன. இதனால் திருப்புவனம் நகரில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் திருப்புவனம் நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். இதனையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Response