மணிமண்டபத்துக்கு போய்ச்சேர்ந்த சிவாஜி சிலை !

sivaaji
கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை மெரினாவின் காமராஜர் சாலையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை நிறுவப்பட்டது. ஆனால், இந்த சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அடுத்து தமிழக அரசு சிவாஜி சிலையை அகற்ற போதிய கால அவகாசம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததால், இதுவரை சிவாஜி சிலை அகற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில், மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு முதல், மெரினா காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றும் பணியில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், ராட்சத இயந்திரங்கள் மூலம் சிலை வைக்கப்பட்ட சிமெண்ட் தளத்தை வெட்டி எடுத்து லாரி மூலம் அடையார் மணிமண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக சிவாஜி சிலை அகற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Leave a Response