இனி வணிக வரி சோதனைச்சாவடி மூடப்படுமா…..

gst1_3166748f
ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது. இதுவரை, ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு மாநிலத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள், மாநில எல்லையில் உள்ள, வணிக வரி சோதனைச்சாவடிகளில் நிறுத்தி, உரிய வரியை செலுத்த வேண்டியிருந்தது.அதனால், கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்பட்டது.

ஜி.எஸ்.டி., அமலானதும், அதற்கான தேவை இருக்காது. வாகனம் புறப்படும் இடத்திலேயே, அது பற்றிய தகவல்களை, இணையதளத்தில் வர்த்தகர்கள் பதிவு செய்துவிடுவர். அதனால், எல்லைகளில் சோதனைச்சாவடிகள் தேவையிருக்காது என்பதால், அவற்றை மூட முடிவு எடுக்கப்பட்டது. எனினும், தமிழகத்தில் அவற்றை மூடுவது பற்றி, இறுதி முடிவு எடுக்காததால், குழப்பம் நீடித்து வருகிறது.

இது குறித்து, வணிக வரித்துறையினர் கூறியதாவது:-

தமிழகத்தில், மாநில எல்லைகளில், 28 சுங்கச்சாவடிகள் உள்ளன. அங்கு, துணை ஆணையர் தலைமையில், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஜூலை, 1 முதல், சோதனைச்சாவடிகள் மூடப்பட வேண்டும். ஆனால், அரசு முடிவு எடுக்காததால், ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது, சரக்கு வாகனங்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது பற்றி, வணிக வரித்துறை செயலர் சந்திரமவுலி கூறுகையில், -”சட்டசபையில், ஜி.எஸ்.டி., திருத்த சட்டம், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. அப்போது, சோதனைச்சாவடிகளை மூட, நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.

Leave a Response