இரும்பு வியாபாரி வீட்டில் 720 பவுன் நகை கொள்ளை!..

irumbu viyabaari
சேலம் கிச்சிப்பாளையம் நாராயணன் நகரை சேர்ந்தவர் அத்தியப்பன்.

சேலம் செவ்வாய்பேட்டையில் இரும்பு மற்றும் பிளைவுட் கடை நடத்தி வந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த கடையை அத்தியப்பனின் மனைவி விஜயலெட்சுமி கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயலெட்சுமி தனது மகன், மகள் மற்றும் தம்பி பாஸ்கர் குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். வீட்டில் விஜயலெட்சுமியின் தந்தை தட்சிணாமூர்த்தி, தாய் சிவபாக்கியம் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

திருப்பதியில் சாமி தரிசனத்தை முடித்த விஜயலெட்சுமி இன்று காலை குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் மாடியில் உள்ள ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலெட்சுமி உள் அறைக்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 720 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.

திருப்பதிக்கு சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றதை அறிந்த விஜயலெட்சுமி சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே கிச்சிப்பாளையம் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மாடியில் உள்ள அறையில் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டதை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வழியாக கொள்ளையர்கள் நுழைந்திருக்கலமா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்த விஜயலெட்சுமியின் தாய், தந்தையிடமும் விசாரணை நடத்தினர். முதியவர்கள் மட்டும் வீட்டில் இருந்த நேரத்தில் யாராவது? தெரிந்த நபர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து விட்டு ஜன்னல் கம்பியை உடைத்து வெளியே தப்பி சென்றிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கை ரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்து பழைய கொள்ளையர்கள் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் நேற்று நடந்ததா?, அல்லது நேற்று முன்தினம் நடந்ததா? என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து போலீசார் கூறுகையில், நகைகள் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

Leave a Response