மகாவீர் சிலை, கண்டெடுப்பு, 1000 ஆண்டு பழைமை…!

mahaveer
வேலுார் அருகே, முள்புதர்களை சுத்தப்படுத்தும்போது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

துரைபெரும்பாக்கம் கிராமப்பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களை சுத்தம் செய்யும்போது, மண்ணுக்குள் புதைந்திருந்த 3 அடி மகாவீர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து மகாவீரின் கற்சிற்பத்தை கைப்பற்றி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் அந்த சிலையை ஆய்வு செய்தார். அதன் பின்னர் சிலை குறித்து கூறிய அவர், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 அடி மகாவீர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 24வது தீர்த்தங்கரரான மகாவீரின் சிலையில் தலைக்குமேல் முக்குடையும், பீடங்களின் மீது சிங்கத்தின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. இது சோழர் காலத்து கடைசி தீர்த்தங்கரர் சிலை ஆகும்.

இதுவரை சமண மதத்தை சேர்ந்த, எட்டு தீர்த்தங்கரர்களின் கற்சிலைகள், பல காலகட்டங்களில், பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, வேலுார் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் செம்பாக்கம், திருமனை, கீழ் மின்னல், மாதனூர், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் சரவணன் தெரிவித்துள்ளார்.

சோழர் காலத்தில் வடக்கு ஆற்காடு என்று சொல்லப்படும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஜெயின் மதத்தினரின் ஆதிக்கம் அதிகளவில் இருந்துள்ளது. அதற்கு சான்றாக வேலூரின் பல இடங்களில் இன்றளவிலும் பழங்காலத்து ஜெயின் கோவில்கள் உள்ளன. தற்போது ஜெயின் மதத்தின் அடையாளமாக மகாவீர் சிலை கண்டெடுக்கப்பட்டது, சோழர் கலாத்தில் ஜெயின் மதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த சிலை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். சமீப காலத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களை சமன் செய்தபோது கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்து சிலைகளில் இந்த மகாவீர் சிலை இரண்டாவது சிலையாகும்.

Leave a Response