அரசு மருத்துவர்கள் : கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கோட்டையை நோக்கி பேரணி..!

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தரவில்லை என்றால் கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்று தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி, நேற்று சேலத்தில் கோரிக்கையை அடங்கிய அட்டையை சட்டைப் பையில் குத்திக் கொண்டு மருத்துவர்கள் பணியாற்றினர். சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில், “24 மணிநேரமும் அரசு மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, எங்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஊதியத்தை உயர்த்தி தந்தே ஆகணும். இதற்காக முதற்கட்டமாக கோரிக்கை அடங்கிய அட்டையை சட்டையில் குறித்து பணியில் ஈடுபட்டுள்ளோம்.

அடுத்தக் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும்” என்று தெரிவித்தனர்.

Leave a Response