சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன.
இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் திட்டத்தை வரவேற்ற தமிழக அரசு, விவசாயிகளின் நிலங்கள் மற்றும் வீடுகளை அளந்து கல் நட்டுவிட்டது. இந்த திட்டத்தால் 7000 ஏக்கர் நிலங்களும் 13,000 மரங்களும் இழக்க நேரிடும்.
விவசாய நிலங்களை கொடுத்து விட்டு வாழ்வாதாரத்தக்கு நாங்கள் என்ன செய்வது என்று கேட்டனர். இதற்கு தமிழக அரசு மசிய வில்லை. இதையடுத்து விவசாயிகள் தொடர்ந்த சென்னை ஹைகோர்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் , பவானி சுப்புராமன் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் சேலம் – சென்னை 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பது குறித்து மக்களுக்கு அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை, இது தவறான விஷயம் என்று நீதிபதிகள் கண்டித்தனர்.
இதையடுத்து 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் மரங்கள் வெட்டப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இடைக்கால தடை ஆகும். எனினும் இந்த திட்டத்துக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.