தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தத் தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்!..

StateElectionவரும் ஜூலை மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. எனவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கான அறிவிப்பையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.சி மற்றும் எஸ்.சி சமுதாய மக்களுக்கு, சரியான இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று கூறி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் சென்னை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவில், “தற்போது வரை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடையவில்லை. வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. எனவே தேர்தலுக்கு அதிகாரிகளை நியமிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான கால அளவை மேலும் நீட்டிக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் அவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் “வரும் ஜூன் மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response