முதல்வர் மற்றும் அமைச்சர்களின் கார்களில் சைரன் நீக்கம்!

edappadi
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் காரில் இருந்த சைரன் விளக்குகள் அகற்றப்பட்டன.

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர உதவி வாகனங்களுக்கு வழிவிடும் வகையில், விஐபி.,களின் கார்களுக்கு சாலையில் வழங்கப்படும் முக்கியத்துவத்தை குறைக்க, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

பிரதமர், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என பலரும் தங்களது கார்களில் சிவப்பு சைரன் விளக்குகளை பயன்படுத்துகின்றனர். இதனை வைத்து, டிராபிக் போலீசார், அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்க, இதர வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இது தேவையற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும், இதர அவசர உதவி வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சிவப்பு சைரன் விளக்குகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என, மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகிய 3 பேருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தங்களது காரில் இருந்த சைரன் விளக்குகளை இன்று அகற்றினர்.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதலில் தனது காரில் இருந்த சைரனை அகற்றினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’’ பிரதமரின் கோரிக்கையை ஏற்று எனது காரில் பயன்படுத்திய சுழலும் சிவப்பு விளக்கை அகற்றியுள்ளேன். விரைவில் அமைச்சர்களும் சிவப்பு சுழல் விளக்கை அகற்றுவார்கள்,’’ என்றார்.

Leave a Response