ஏப்ரல் 1-ல் தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி!

tamn
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த 27-ந் தேதி தேர்வு முடிந்துவிட்டது. உயிரியியல் பாடத்தை விருப்பபாடமாக எடுத்த மாணவ-மாணவிகளுக்கும், சுத்த உயிரியியல் (விலங்கியல்- தாவரவியல்) பாடத்தை விருப்பபாடமாக எடுத்த மாணவ- மாணவிகளுக்கும் தேர்வு 31-ந் தேதி முடிவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைந்தது. பிளஸ்-2 தேர்வு முடிவு மே 12-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மே 19-ந் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி செய்துள்ளார்.

பின்னர் அவர் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது பிழை இன்றி இருக்கவேண்டும் என்றும், மதிப்பெண் கூட்டல் சரியாக இருக்கவேண்டும் என்றும், தவறாக மதிப்பீடு செய்யப்பட்டால் கண்டிப்பாக விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு தண்டனை உண்டு என்றும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ந் தேதி தொடங்க இருக்கிறது. தமிழ் முதல் தாளுடன் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ந் தேதி தொடங்குகிறது.

Leave a Response