மீண்டும் சென்னை மெரினாவில் போராட்டம் ஆரம்பிக்குமா!

marina-jallikattu
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை மெரினா மீண்டும் போராட்டகளாக மாற தயாராகி வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்க கோரி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. போராட்டத்தின் போது இனி ஒவ்வொரு முக்கிய பிரச்னைக்காகவும் போராட்டம் தொடரும் என மாணவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். சமூக வலைதளங்களிலும் ஆதரவலைகள் பெருகிறது.

இந்நிலையில் டில்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினா மற்றும் மதுரை தமுக்கத்தில் நேற்று இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். முதலில் குறைந்த அளவே இளைஞர்கள் இருந்ததால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இத்தகவல் பின்னர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து பல மீம்களும் உருவாக்கப்பட்டு வைரலாகியது. மேலும் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பலர் இன்று (29ம்தேதி) சென்னை மெரினாவில் பெரிய அளவில் போராட்டத்தில் இறங்குவதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால் சென்னை மெரினாவில் கடற்கரை மீண்டும் ஒரு போராட்ட களமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கும் பட்சத்தில் இந்த போராட்டமும் தமிழகமும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Response