ஒண்ணு வர்றதுக்குள்ள மூணு தயாராகுது – தேறுவாரா ஜீ.வி.பிரகாஷ்..?

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இது தெரிந்த கதை..

இந்தப்படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா என அடுத்த அட்டாக்கிற்கு தயாராகி விட்டார் ஜீ.வி.பிரகாஷ். குழம்பவேண்டாம். ஜீ.வி.யின் இன்னொரு பட டைட்டில் தான் ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’. ரிபெல் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்தை ஆதிக் என்பவர் இயக்குகிறார். அப்ப மியூசிக்.. அதுவும் ஜீ.வி.பிரகாஷே தான்.

இந்த இரண்டு படங்களுமே ரிலீசாகாத நிலையில் தற்போது மூன்றாவதாக ‘டார்லிங்’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் வெளியான ‘1983’ புகழ் நிக்கி கல்ராணி நடிக்கிறார். சாம் ஆண்டன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை அல்லு அரவிந்த்தின் கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே மூன்று படங்களில் நடிக்கும் ஜீ.வி.பிரகாஷ் ஒரு நடிகராக தேறுவாரா என்பது ‘பென்சில்’ வந்தால் தெரிந்துவிட போகிறது.