“ஆறுமாதம் என்பது என் ஒரு வருட உழைப்புக்கு சமம்” – இயக்குனர் ஹரி..!

தயாரிப்பாளர்களின் இயக்குனர் என சொல்லப்படுகிறவர்களில் கே.எஸ்.ரவிகுமாருக்கு அடுத்த இடத்தில் நிற்பவர் இயக்குனர் ஹரி.. இந்த 13 வருடங்களில் சரியாக 13 படங்களை இயக்கிய சாதனைக்கு சொந்தக்காரர்.. ஒரு படம் ரிலீஸாகி இரண்டு வாரம் ஓடிவிட்டாலே மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டதாக பேசிக்கொள்ளும் இந்த அசாதாரணமான சூழலில் ஹரி டைரக்‌ஷனில் வெளியாகும் படங்கள் திருட்டு வி.சி.டி, இன்டெர்நெட் இவற்றையெல்லாம் முறியடித்து பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகின்றன.

இப்போது 13வது படமாக விஷாலை வைத்து ‘பூஜை’யை தயார்செய்து தீபாவளி ரிலீஸுக்காக காத்திருக்கிறார். நேற்று இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த இயக்குனர் ஹரி, தனது திரையுலக பயணங்கள் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

“ஹீரோக்கள் சரியான நேரத்திற்கு வராவிட்டால் அதைத்தான் டார்ச்சர் என சொல்லுவேன். எனக்கு டான்னு 6.3௦ மணிக்கு ஸ்பாட்ல நிக்கணும். ஆனால் இதுவரைக்கும் என் பட ஹீரோக்கள் அனைவருமே அந்தவகையில் எனக்கு டார்ச்சர் கொடுத்ததே இல்லை.

ஆனால் கதையில், வசனத்தில், காட்சியில் சில நேரங்களில் அவர்களுக்கு சந்தேகமோ, குழப்பமோ இருந்தால் அதற்கு உடனே நான் பதில் சொல்லாமல், எனது உதவி இயக்குனர்களை கூப்பிட்டு அந்த காட்சிக்காக நாம் முதலில் யோசித்த காட்சிகள் என்னென்ன, எழுதிய வசனங்கள் என்னென்ன என சொல்லவைப்பேன். சம்பந்தப்பட்ட ஹீரோவும் சந்தேகம் விலகி தெளிவாகிடுவாங்க..

ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கின்போதும் ஸ்பாட்டில் இல்லாவிட்டாலும் கூட தயாரிப்பாளர்தான் என் கண்முன்னாடி தெரிவார்.. என்னுடைய வேகம் அவரது பணத்தை கொஞ்சம் மிச்சப்படுத்துமே என்பதால்தான் படங்களை விரைந்து முடிக்கிறேன்.. ஆனால் ஸ்கிரிப்ட்டை தயார் செய்ய ஆறுமாதம் எடுத்துக் கொள்கிறேன்.. ஆனால் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரத்துக்கு மேல் கதைக்காக உழைப்பதால் அதை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கான உழைப்பு என்றுதான் சொல்லவேண்டும். இன்றுவரை அனைவரும் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று என்னை கைகாட்டி சொல்வதை பார்க்கும்போது மண நிறைவாக இருக்கிறது” என்றார் ஹரி மடைதிறந்த வெள்ளமாக.