தமிழர் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு திமுக நாடகம் ஆடுகிறது:அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!

தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்னைகளில் தமிழர் பிரச்னைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, இப்போது திமுக நாடகம் ஆடுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து, திமுக அவைக்கு வராமல் புறக்கணித்துள்ளது.

இதுகுறித்து இன்று அவை கூடுவதற்கு முன்பு மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ஸ்டெர்லைட் பிரச்னையை ஒருநாள் மட்டுமல்ல வருடம் முழுவதும் விவாதிக்க நாங்கள் தயார். ஆனால், திமுக அவைக்கு வரத் தயாரா ? ஒவ்வொரு முறையும் தமிழர் உரிமையை திமுக விட்டுக்கொடுத்துள்ளது.

காவிரி, கச்சத்தீவு, முல்லைப்பெரியாறு, ஸ்டெர்லைட் என அனைத்து விவகாரங்களிலும் தமிழர் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு, தற்போது திமுகவும் ஸ்டாலினும் நாடகம் ஆடி வருகிறார்கள்.

மடியில் கனம் இருப்பதால்தான் திமுக சட்டசபைக்கு வர பயப்படுகிறது. எங்கு சபைக்கு வந்தால், தங்களது குட்டு உடைந்துவிடுமோ என்கிற அச்சத்தில் திமுக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response