தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்!:சேலத்தில் மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி ஒருவர் பலி!

சேலத்தில், தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவிகள் இருவர் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சேலம் அரிசிப்பாளையத்தில் உள்ள பெண்கள் தனியார் மேல்நிலைப்பள்ளியில் கவிஸ்ரீ, ஜெயராணி இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று வெள்ளிக்கிழமை 8ம் தேதி பள்ளிக்குச் சென்றவர்கள், மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கவிஸ்ரீயின் தந்தை சக்திவேல், ஜெயராணியின் தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவு மகள்களைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். இதுகுறித்து பதிவு செய்து, போலீஸார் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில், சேலத்தின் மையப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் இன்று காலையில், குதித்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் அறிந்ததும் சேலம் டவுன் காவல்நிலையப் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது நடத்திய விசாரணையில், அந்த இரண்டுபேரும் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பாத மாணவிகள் என்பது தெரியவந்தது.

picsjpg

இதில் மாணவி ஜெயராணி சம்பவ இடத்திலேயே இறந்தார். கவிஸ்ரீ ஆபத்தான நிலையில், சேலம் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு உள்ளார். முதல்கட்ட விசாரணையில், கவிஸ்ரீ, ஜெயராணி இருவரும் பள்ளியில் அடிக்கடிப் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றும் இதனால் ஆசிரியர்கள் அந்த இரண்டுபேரையும் அழைத்துத் திட்டியதாகவும் தெரிய வந்திருக்கிறது.

 

பள்ளிக்குச் சென்ற மாணவிகள் வீடு திரும்பாததும் மறுநாள் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளப்பட்டி, டவுன் காவல் நிலைய போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில், மாணவிகள் நான்குபேரை ஆசிரியர்கள் திட்டியதாகவும் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியதாகவும் அதனால் நான்கு மாணவியரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஏற்படுத்தித் தரவேண்டும். முக்கியமாக, தமிழக அரசு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மனநல ஆலோசனைக் கருத்துகளை அனைத்துப் பள்ளிகளீலும் நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்கொலை தீர்வாகாது..

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை நிச்சயம் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் தோன்றினால் யாராக இருந்தாலும் மாநில உதவி மையமான 104- உதவி எண்ணுக்கு அழைக்கலாம். அல்லது ‘ஸ்நேகா’ தற்கொலை தடுப்பு மையத்தை 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Response