‘சத்யா’ படத்தின் திரை விமர்சனம்!

 anandaraj-varalaxmi-sibiraj-sathish-in-sathya-movie-stills-hd_18515

ஒரு குழந்தை, ஒரு தாய், முன்னாள் காதலன், சில மர்மங்கள் இவற்றுக்கிடையேதான் ‘சத்யா’வின் பயணம்.

 

‘சைத்தான்’ பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி,இயக்கிய  ‘சத்யா’  .  சிபிராஜ், ரம்யா நம்பெசன், வரலட்சுமி, நகைச்சுவை நடிகர் சதீஷ், அனந்த ராஜ் மற்றும் பேபி ஷெரின் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். சிபிராஜ் சத்யாவாக நடித்தார் மற்றும் பேபி ஷெரின் ரிஹாவின் பாத்திரம் வகிக்கிறார். யோகி பாபு, நிஜல்கல் ரவி, பாலாஜி வேணுகோபால், ரவி வர்மா, சித்தார்த் சங்கர் மற்றும் வினோதித்தினி வித்யநாதன் ஆகியோர் இந்த படத்தில் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

 

இந்த ஸ்கிரிப்ட் பிரதீப் கிருஷ்ணமுர்த்தி எழுதி இயக்கியுள்ளார், ஒளிப்பதிவு அருணாமணி பழனி கையாண்டிருக்கிறார். மதன் கார்கியும் ரோகேஷும் இந்த பாடல்களை எழுதியுள்ளனர். Simon.K. King  பிலிம் ஃபேக்டரி சார்பில் சிபிராஜின்  தாய் மகேஸ்வரி சத்யராஜ் தயாரிக்கிறார்.

 

தெலுங்கில் ஹிட்டான ‘க்‌ஷணம்’ படத்தின் ரீமேக் தான் ‘சத்யா’.கல்லூரிக்கு பதில் ஐ.டி நிறுவனம் என மாற்றம் செய்து தமிழில் ரீமேக்கியிருக்கிறார்.

sibiraj-ramya-nambeesan-in-sathya-movie-stills-hd_18361

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சிபிராஜ், ரம்யா நம்பீசன் இருவரும் காதலர்கள். காதலை எதிர்ப்பது ரம்யாவின் தந்தை நிழல்கள் ரவி. இருவரும் சேர முடியாமல் பிரிய, சிபி, ரம்யாவின் நினைவுகளுடன் தாடி வளர்த்தபடி சிட்னியில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென ரம்யாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வர, உடனடியாகச் சென்னை வருகிறார் சிபி. ”என் குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள்” என்று ரம்யா நம்பீசன் பதற, தேடல் வேட்டையை ஆரம்பிக்கிறார் சிபி. ஆனால் ‘ரம்யாவுக்கு அப்படி ஒரு குழந்தையே இல்லை’ என்கிறார்கள் சுற்றியிருப்பவர்கள். குழந்தையும் கடத்தலும் ரம்யாவின் கற்பனைதானா, ஏன் அப்படி ரம்யா சொல்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறது ‘சத்யா’.

 

எளிதில் யூகிக்க முடியாத ஒரு முடிச்சை வைத்துக்கொண்டு அதை நோக்கி ஆடியன்ஸை அழைத்துச் செல்லும் ஐடியா நச். அவ்வப்போது சின்னச் சின்ன தொய்வு ஏற்பட்டாலும், திடீரென எதிர்பாராத ஒரு திருப்பம் வந்து, நம்மைத் தொடர்ச்சியான பரபரப்பில் வைத்திருக்கிறது படம். ஒரு குழந்தை. அது கடத்தப்பட்டதா இல்லையா என்பதைத் தாண்டி அப்படி ஒரு குழந்தை நிஜமாகவே இருக்கிறதா இல்லையா என்ற ரீதியில் அமைந்திருக்கும் திரைக்கதை (ஒரிஜினல் தெலுங்கு) செம சுவாரஸ்யம்.  யார் சொல்வது உண்மை? பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் யார்? இதில் எவையெல்லாம் கற்பனை என நம்மையும் யோசித்துக்கொண்டே இருக்கச் செய்வதால் படத்தின் மேக்கிங் குறைகள் பெரிதாகத் தெரிய மறுக்கின்றன.

 

varalaxmi-sarathkumar-sibiraj-in-sathya-movie-stills-hd_18290

“நீ எல்லாம் ப்ளைன்ட் டேட் போக பொண்ணு வேணும், நானெல்லாம் டேட்டிங் போறதுக்கே, பொண்ணு ப்ளைன்டா இருக்கணும்” என யோகிபாபுவின் பன்ச், `நீ உட்காந்தாலே நிக்கற மாதிரிதான் இருக்கும், எதுக்கு எழுந்து நிக்கற?’ என ஆனந்தராஜ், சிபியிடம் பேசும் சில ஒன்லைனர்களின் காமெடிகள் மூலம் ஆங்காங்கே சிரிக்கவைக்கின்றன கார்த்திக் கிருஷ்ணாவின் வசனங்கள்.

 

சிபிராஜின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சத்யா’. தேவையான நேரங்களில் தேவையான உணர்ச்சிகளைக் காட்டியிருக்கிறார்.  படத்தில் ஒரு வசனம் வரும். ‘எனக்கு நடிக்க வராது’ என்பார் சிபி. ‘அதான் எல்லாருக்கும் தெரியுமே’ என்பார் யோகிபாபு. இப்படித் தன்னைத்தானே கலாய்த்துக்கொள்வதற்கு தில்லு வேண்டும். வாழ்த்துகள் சிபி! படத்தில் அழுத்தமான ரோல் ரம்யா நம்பீசனுக்கு. கதை தன்னைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் வெயிட்டேஜை உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார் ரம்யா. காதல் காட்சிகளை விட சென்டிமென்ட் காட்சிகள் அதிகம். கொஞ்சம் மிஸ்ஸானாலும் மிகைநடிப்பு ஆகிவிடக்கூடிய கதாபாத்திரம். அதை மனதில் வைத்து லிமிட் தாண்டாமல் நடித்திருப்பதால் ‘ஸ்வேதா’வோடு ஒன்றிப் போக முடிகிறது நம்மால்.

 

அனுயா பரத்வாஜாக வரும் வரலட்சுமிக்கு கெத்தான போலீஸ் அதிகாரி ரோல். முதல் பாதியில் இரண்டே காட்சிகள்தாம். ஆனால் மொத்தத்திற்குமாக சேர்த்து இரண்டாம் பாதியில் மிரட்டியிருக்கிறார். சதீஷுக்கு வழக்கத்திற்கு மாறாக இதில் சீரியஸ் வேடம். கதையின் முக்கிய ட்விஸ்ட்டை ஓப்பன் செய்த திருப்தியோடு ஒதுங்கிக்கொள்கிறார். யோகிபாபுவிற்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்கவைக்கத் தவறவில்லை யோகி. ஆனந்தராஜ் ஒருசில சீன்களில் கிச்சுக்கிச்சு மூட்டினாலும் க்ளைமாக்ஸில் வரும் வழக்கமான போலீஸ்காரராகவே அவரது கதாபாத்திரம் இருக்கிறது, ப்ச்!.

 

அந்த முடிவு எதிர்பார்க்காததுதான்; ஆனால் “இதுக்கா இவ்ளோ அலப்பறை” என்ற எண்ணமும் எழாமலில்லை. எல்லோரிடமும் “அதை ஏன் சொல்லல… இதை ஏன் சொல்லல” என்கிறார் சிபி. முக்கியமான ரீமேக்கை மாற்றாமல் எடுக்க நினைத்து, ஃப்ளாஷ் பேக் கதை, நிகழ்கால கதை என இரண்டையும் இணைத்துச் சொன்னது போலவே சொல்லியிருந்தது ஓகே. ஆனால், க்ளைமாக்ஸில் வரும் மழை முதற்கொண்டு அப்படியே  ரீமேக்கியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். CCTV கேமரா புட்டேஜ் எனக் காட்டப்படுகிற வீடியோவின் ஆங்கிள், க்ளைமாக்ஸ் துப்பாக்கிச் சூடு காட்சியின் தொடர்பற்ற கேமரா கோணம் போன்றவற்றில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கிட்டத்தட்ட இடைவேளை வரை ஒரு க்ளூவும் இல்லாததால் ஆங்காங்கே சலிப்புதட்ட ஆரம்பிக்கிறது.

sibiraj-yogi-babu-in-sathya-movie-stills-hd_18354

ஒரு மர்ம முடிச்சை சிபிராஜ் தீர்க்க முயலும்போதே அதன்மீது இன்னொரு முடிச்சு விழுகிறது. சுவற்றில் பட்டுப் பட்டு திரும்பும் பந்துபோல திரும்பத் திரும்ப தொடக்கப்புள்ளிக்கே வந்து நிற்கிறார் ஹீரோ. இறுதியாக அத்தனை முடிச்சுகளும் அவிழும்போது அதற்கான காரணங்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சிபிராஜிடம் குழந்தையைத் தேடச் சொல்லும் ரம்யா, எதற்காக அவரைத் தேடச் சொல்கிறார் என்ற காரணத்தை மட்டும் சொல்லாமல் மறைப்பது ஏன்? மூன்று வயதுக் குழந்தை எப்படி தன் அம்மா ரம்யா நம்பீசனைத் தேடாமல் இருக்கிறது?

 

வெளிநாட்டிலிருந்து இங்கே வரும் சிபிராஜ் போலீஸாரை மிஞ்சி சாகசங்கள் செய்வது உறுத்தல். த்ரில்லர் கதையில் தற்செயலாக ஒரு ட்விஸ்ட்டை கண்டுபிடிப்பது சகஜம்தான். ஆனால், இதில் சதீஷை நைஜீரியக்காரர்களோடு பார்ப்பது, பாலாஜியின் ஐ.டி கார்டு கிடைப்பது… என முக்கால்வாசி ட்விஸ்ட்டுகள் ‘தற்செயலாக’ நிகழ்வது திகட்டல். படம் முடிந்த வெளியேவரும்போது, ‘அதெப்படி சொல்லிவச்ச மாதிரி வரிசையா இவ்வளவும் நடக்கும்?’ என்ற கேள்வி மண்டையைக் குடைகிறது.

 

‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்திற்கு இசையமைத்த சைமன் கிங்தான் இந்தப் படத்திற்கு இசை. ‘காதல் ப்ராஜெக்ட்’ பாடலில் மெலிதாக வருடி, ‘யவ்வனா’ பாடலில் நம்மைத் தாளம் போட வைக்கிறார். குழந்தையைத் தேடித் திரியும் த்ரில்லர் போர்ஷனுக்கு சைமன் அமைத்திருக்கும் பின்னணி இசை கச்சிதம். க்ளைமாக்ஸில் வரும் ‘யவ்வனா’வின் ரீப்ரைஸ் வெர்ஷன் டாப் க்ளாஸ். நிறைய படம் பண்ணுங்க ப்ரோ!

எங்கேயும் வழவழகொழகொழ காட்சிகள் இல்லாததில் எடிட்டர் கௌதம் ரவிச்சந்திரன் எவ்வளவு ஸ்ட்ரிக்ட் எனத் தெரிகிறது. ஃபாரீனில் தொடங்கி ஈ.சி.ஆர் வழியே பயணித்து மந்தைவெளி இண்டு இடுக்குகளைக் கடந்து திரும்ப ஈ.சி.ஆரிலேயே கதை முடிந்தாலும் பயணித்த களைப்பு தெரியாததற்குக் காரணம், அருள்மணி பழனியின் அற்புதமான ஒளிப்பதிவு.

சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும், நாம் யூகிக்க முடியாத திருப்பங்களுடன், சுவாரஸ்யமான த்ரில்லர் பார்த்த திருப்தியைத் தரும்  ‘சத்யா’, டைட்டிலின் கௌரவத்தைக் காப்பாற்றிவிடுகிறது

Leave a Response