நிவின் பாலியின் ‘ரிச்சி’ – படம் எப்படி? 

08-1512735303-richi4

 

 

நிவின் பாலி, நட்ராஜ், ஷ்ரத்தா ஶ்ரீநாத், லட்சுமி பிரியா, பிரகாஷ்ராஜ், குமரவேல், முருகதாஸ் ஆகியோர் நடித்து இன்று வெளியாகி இருக்கிறது ‘ரிச்சி’ திரைப்படம். கௌதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசைமைத்திருக்கிறார். பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்திற்கு அதுல் விஜய் எடிட்டராகப் பணியாற்றி இருக்கிறார். ரக்‌ஷித் ஷெட்டி, கௌதம் ராமச்சந்திரன் இருவரும் இணைந்து திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களின் மனங்கவர்ந்த நாயகனாகிவிட்ட நிவின் பாலியின் நேரடித் தமிழ்ப்படம் இது. கோலிவுட்டில் முன்னணி இடம் பிடிக்க முயற்சிக்கும் அவருக்கு ‘ரிச்சி’ வெற்றியைத் தந்திருக்கிறதா..? வாங்க பார்க்கலாம்…

08-1512735263-richi6

 

 

2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘உலிதவரு கண்டந்தே’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘ரிச்சி’. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மீனவப் பகுதியான மணப்பாடு தான் ரிச்சியின் கதைக்களம். மணப்பாடு லோக்கல் ரௌடியாக அசத்தியிருக்கிறார் மலையாள நிவின் பாலி. வெற்றிலை குதப்பும் வாய், பிஸ்டல் பவுச்சுடன் இணைந்த போலீஸ் பெல்ட், ஒருக்களித்த நடை என நிவின் பாலி ராவான ரௌடி. இந்த கெட்டப்பில் அச்சு அசலாக அப்படியே பொருந்துகிறார் தாடிக்கார நிவின் பாலி. மிரட்டல் இல்லை, உருட்டல் இல்லை, நக்கலான பேச்சு, ஸ்டைலான நடை, அதிகபட்சம் துப்பாக்கி, அவ்வளவுதான் இந்த ‘ரிச்சி’. ஆனாலும், யதார்த்தமான நடிப்பால் அசரடிக்கிறார். பலரது பார்வையில் ஒரு கதை நிவின் பாலியை சிறுவயதில் புகைப்படம் எடுத்த ஷ்ரத்தா அவருடைய கதைகளைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார். வளர்ந்தபின் அவர் நிவின் பாலியை பார்த்தது ஒரே ஒரு முறைதான். ‘அக்னி பார்வை’ எனும் பத்திரிகை ஒன்றில் வேலை பார்க்கும் ஷ்ரத்தா நிவின் பாலி பற்றிய க்ரைம் தொடரை எழுதுவதற்காக அவர் பற்றிய தகவல்களைத் தேடி அலைகிறார். நிவின் பாலி சம்பந்தப்பட்ட சிலரிடம் உண்மைக் கதைகளைக் கேட்கிறார். நிவின் பாலியின் வாழ்க்கைக்குச் சாட்சியாக இருக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தரப்பின் உண்மையைச் சொல்கிறார்கள். ஒவ்வொருக்கும் ‘ரிச்சி’ மீதான பார்வை வேறுபடுகிறது. ஒருவருக்கு தியாகியாகத் தெரிபவன் இன்னொருவருக்கு துரோகியாகத் தெரிகிறான்.

08-1512735221-richi7

உண்மைக்கு ஒரு முகம் மட்டுமே கிடையாது அல்லவா? நிவின் பாலியைப் பற்றிய கதைக்குச் சாட்சியாக இருக்கும் ஒவ்வொருவரும் சொல்லும் கதை அப்படியே நகர்த்தப்படுகிறது. சிறுவயதில் செவன் ஷாட் விளையாடும்போது ஏற்படும் சண்டையில் ராஜ் பரத் ஒரு சிறுவனை கத்தியால் குத்தி விடுகிறார். அந்தக் கத்தியை நிவின் பாலி பிடுங்குகிறார். இருவரும் தப்பித்து ஓடப்போக, ராஜ் பரத் இன்னொரு பக்கம் ஓடி படகில் ஒளிந்துகொண்டு கொல்கத்தாவுக்கு சென்று தலைமறைவாகி விடுகிறார். கையில் கத்தியோடு நிற்கும் நிவின் பாலி குற்றவாளியாக்கப்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுகிறார்.

08-1512735343-richi3

பச்சைத் துரோகத்தின் தழும்போடும், இளமை பறிபோன ஏக்கத்தோடும், செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை அனுபவிக்கும் சிறுவனின் முரட்டுத்தனம் ஜெயிலில் நடக்கும் சம்பவங்களால் இன்னும் வளர்கிறது. எட்டு வருடங்கள் கழித்து விடுதலையாகும் நிவின் பாலி அந்தப் பகுதியில் தாதாவாக இருக்கும் ஐசக்கிடம் வேலைக்குச் சேர்ந்து விடுகிறார். சட்டத்தை மீறிய தொழில்களைச் செய்யும் ஐசக்கிற்கு வலது கையாக இருக்கிறார் நிவின் பாலி. கட்டிட்டு வா என்றால் வெட்டிட்டு வரும் முரடன். சிறுவயதில் அறியாமல் ஏற்றுக்கொண்ட வலியைச் சுமந்து திரிகிறார் நிவின் பாலி.

 

நிவின் பாலியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் அந்த ஊர் சர்ச் ஃபாதராக நடித்திருக்கிறார். தன் மகனை ரௌடியாக பார்த்து வெதும்பும் இடத்திலும், மகன் மரணித்ததை அறிந்து கலங்கும் இடங்களிலும் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. மகன் மீதான பரிவைக் காட்டும் இடங்களில் செமையாக ஸ்கோர் செய்கிறார். ‘ஆடுகளம்’ முருகதாஸ் நிவின் பாலியின் கூட்டாளியாக நடித்திருக்கிறார். நண்பனிடம் எதையும் மறைக்க முடியாமல் பதறும் காட்சிகளிலும், நண்பனைச் சுட்டவனை துப்பாக்கியால் சுடும் காட்சிகளிலும் பயம் காட்டி மனதில் நிற்கிறார். நண்பனுக்குச் செய்த துரோகத்தை மறக்க முடியாமல் சீரியஸ் ஃபேஸ் காட்டும் ராஜ் பரத் கவர்கிறார்.

 

‘ரேர் பீஸ்’ நட்டி (எ) நட்ராஜ் இந்தப் படத்தில் போட் மெக்கானிக்காக தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னால் நண்பன் இறந்துபோன துக்கத்தை வெளிப்படுத்துகிற காட்சிகளிலும், இன்னொருவனின் மரணமும் அதே போல நிகழ்ந்துவிடக்கூடாது எனப் பதறுகிற காட்சிகளிலும் வெறித்தனம். ஒருதலையாகக் காதலிக்கும் லட்சுமி பிரியாவை இம்ப்ரெஸ் செய்ய நட்ராஜ் செய்யும் அட்ராசிட்டிகள், கடைசி வரை காதலைச் சொல்லாமல் சாகிற காட்சியிலான முகபாவம் என அசத்தியிருக்கிறார். தன் நண்பனின் சாவுக்குக் காரணமானவனைக் கொல்லும் வன்மத்துடன் புலியாட்டம் ஆடுவது மரண அதகளம். கதாபாத்திர வடிவமைப்புகள் படத்தில் கதை சொல்லும் மனிதர்களின் பக்கங்களை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். நேரடியாகச் சொல்லாவிட்டாலும் எளிதாக உணர்த்தும் காட்சி அமைப்புகள். குமரவேல் கேரக்டர் தொடங்கி ‘டெமாக்ரசி’ எனும் சிறுவனின் கேரக்டர் வரை அத்தனையும் அசத்தல். ‘உன் பேர் என்னடா?’ எனக் கேட்கும்போது ‘டெமாக்ரசி’ எனச் சொல்கிறான் சிறுவன். ‘அது என்னடா டெமாக்ரசி’ எனக் கேட்க ”For the people; by the people” எனச் சொல்வான். அப்போது அவன் நிவின் பாலிக்கு கள் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருப்பான். நட்ராஜுக்கு ஹெல்ப்பராகவும், லட்சுமி பிரியா உடன் இருப்பவனாகவும் காட்டப்படும் ‘டெமாக்ரசி’ கேரக்டர் மறக்க முடியாதது.

08-1512735688-richie4565

அதேபோல, ராஜ் பரத்தின் அம்மா கேரக்டர் காத்திருப்பின் குறியீடு. மகனுக்காக கடற்கரையிலும், மீண்டும் வந்து காணாமல் போனவனுக்காக பெட்டியோடு ரயிலடியிலும் காத்துக்கொண்டே இருக்கிறார். லட்சுமி பிரியா ஷ்ரத்தா ஶ்ரீநாத்துக்கு அதிகமான காட்சிகள் இல்லை. கதை கேட்கிற காட்சிகளில் மட்டுமே வருகிறார். படத்தின் இறுதியில் நிவின் பாலியின் சிறுவயது புகைப்படத்தை கல்லறையில் வைத்துவிட்டு கலங்கும் காட்சியில் பார்வையாளர்களையும் கலங்க வைக்கிறார். ‘லட்சுமி’ குறும்படம் புகழ் லட்சுமி பிரியா மீன் விற்கும் பெண்ணாக நடித்திருக்கிறார். கடன் வாங்கித் திரியும் அண்ணன் குமரவேலை திட்டும் காட்சி, அண்ணனை நிவின் பாலி அடித்து உதைத்த தகவல் அறிந்து பதைபதைப்புடன் தேடும் காட்சிகள், அவரது அறிமுகக் காட்சி, என எண்ணெய் வழியும் முகத்துடன் அத்தனை யதார்த்தமான அழகு. பின்னணி இசை பக்கா பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் அஜனீஷ் லோக்நாத். நிவின் பாலியின் என்ட்ரிக்கு வரும் பி.ஜி.எம், புலியாட்டத்தின் போது ஒலிக்கும் ரணகளமான பறை இசை ஆகியவை படத்தின் களத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. பெரும்பாலும் இருட்டில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாண்டி குமார்.

08-1512735367-richi2

சிக்கலான திரைக்கதையை தொய்வு ஏற்படாத வண்ணம் சிறப்பாகத் தொகுத்திருக்கிறார் எடிட்டர் அதுல் விஜய். யோசிக்க வைக்கும் வசனங்கள் “துரோகத்தோட வலி என்னனு தெரியுமா… அது எப்பவுமே எதிரிகிட்ட இருந்து வராது” என்பது போலச் சில இடங்களில் நறுக்கென தெறிக்கும் வசனங்கள். வசனங்களின் மூலமே நிறைய யோசிக்க வைக்கிறார் இயக்குநர். நிவின் பாலி கதை சொல்லும் இடங்களில் அவர் கலங்காமல் பார்வையாளர்களை மட்டும் வலியை உணர வைக்கிறார். அவர் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கும் காட்சியை விவரிக்கும் ‘டேஷ் அண்ட் டேஷ் டேஷ்’ கதை, எதற்கென்றே தெரியாமல் பழி தீர்க்கப்படும் ‘கியூபன் சிறுவன் vs மதுரைப் பையன்’ கதை ஆகிய இரண்டும் தான் கதையின் மொத்தக் கரு.

 

ரிச்சியின் வாழ்க்கைக்கு சாட்சியாக இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் கதை சொல்லும் போக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. ஆனால், அவற்றை நிவின் பாலியே சொல்லும் இரண்டு கதைகளின் மூலம் புரிய வைக்கிறார்கள். இந்த ரௌடிகதையில் போலீஸ் இல்லை… இன்னொரு தரப்பு ரௌடி கும்பல் இல்லை… ரௌடிக்கும் தனி நபர்களுக்கும் இடையேயான துரோகமும், பழிவாங்கலும் தான் படம். படத்தின் முடிவில், நல்லவன் யார், வில்லன் யார் என்கிற கேள்விகளுக்குப் பதிலேதும் இல்லை. மனிதர்களின் சூழ்நிலைகளே அவனது பயணத்தைத் தீர்மானிக்கின்றன என யோசிக்கவைக்கும் படியாக முடித்திருக்கிறார்கள். ரிச்சி – சிக்கல்கள் நிறைந்தவன்; ஒழுங்கற்றவன். உடனிருந்த மனிதர்களாலேயே புரிந்துகொள்ள முடியாதவன். ஆனால், அவனது ரௌடி வாழ்க்கையில் ஒரு அழகியல் இருக்கிறது. துரோகத்திற்கு பச்சாதாபம் தேடாத மனம் இருக்கிறது. ரிச்சியின் வாழ்வில் வரும் சக மனிதர்களின் காதல் அத்தனை வசீகரமாயிருக்கிறது. ‘ரிச்சி’ டாப் கியரில் பறக்காவிட்டாலும் ரசிக்க வைக்கும். வெல்கம் நிவின் பாலி!

Leave a Response