
ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தெரு தெருவாக கணக்கெடுப்பு பணி நடைபெறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தலுக்கு இன்றும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆர்கே நகரில் பாஜக சார்பில் போட்டியிடும் கரு நாகராஜனை ஆதரித்து தமிழிசை சவுந்தரராஜன் பிரச்சாரம் செய்தார்.
தமிழிசை சாலைமறியல்
அப்போது ஆர்.கே.நகரில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றம் சாட்டி, புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு அருகே தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் மற்றும் பாஜகவினர் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய தெரு தெருவாக கணக்கெடுப்பு பணி நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.

ஊழல்வாதிகள் நீக்கப்படனும்..
வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வெளி மாவட்டங்களை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.நகரில் தங்கியுள்ளனர் என்றும் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். ஊழல்வாதிகள் தேர்தலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
ஆர்கே நகரில் தங்கியுள்ள வெளியாட்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

வீடுவீடாக ஆய்வு
பணப்பட்டுவாடா செய்ய கணக்கெடுக்கும் ஆதாரம் தங்களிடம் உள்ளது என்றும் தமிழிசை கூறினார். ஆர்.கே.நகரில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டிய தமிழிசை தேர்தல் அதிகாரி வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.