உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு 17 வயது சிறுமியை காதலன் அழைத்துச் சென்று வாடகை வீட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த திங்கட்கிழமை அந்த 17 வயது சிறுமி தன் தோழியுடன் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியின் காதலன் சிவம் வர்மா தன்னுடன் பைக்கில் வருமாறு சிறுமியை அழைத்தார். அந்த சிறுமியும் அதனை ஏற்றுக்கொண்டு அவருடன் சென்றார்.
பின்னர் தோழி வீட்டிற்கு திரும்பிவிட்டார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சிவம் வர்மா அந்த சிறுமியின் தோழிக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு அவளுக்கு அவள் அழகைப்பற்றி பெருமை அதிகம், அவள் உண்மையில்லாதவளாக இருந்ததால் அவளுடைய கழுத்தை அறுத்து நான் கொலை செய்து விட்டேன், இதனை அவளுடைய தந்தைக்கு சொல்லிவிடு என்று கூறியுள்ளான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தோழி உடனடியாக சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமியின் தந்தை தன்னுடைய மகளை பார்த்து கதறி துடித்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி போன்றவைகள் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்ப ஏற்பாடு செய்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் இரண்டு மணி நேரமாக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் சிறுமியின் பெற்றோரை சமாதானப்படுத்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை கொலை செய்த அந்த காதலனை தற்போது போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.