சினிமா பாணியில் மூத்த பெண்ணை கொலை செய்த கில்லாடி ஆட்டோக்காரன்!

பெங்களூரு நகரில் 59 வயது முதிய பெண் காணாமல் போனது தொடர்பான கொலை வழக்கு, நீண்ட விசாரணைக்கு பிறகு போலீசாரால் தீர்க்கப்பட்டது.

அதாவது கொத்தனூர் (Kothanur) பகுதியைச் சேர்ந்த மேரி (Mary) என்ற பெண் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமானார். இது தொடர்பாக அவரது மருமகள் போலீசில் புகார் அளித்தார். பல மாதங்களாக நடத்திய விசாரணையில் பிளம்பர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரான லட்சுமண் என்பவர் பணத்திற்காக அவரை கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லட்சுமண் ரூ.2 லட்சம் கடன் பெற்றிருந்ததால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடியில் இருந்ததுவிசாரணையில் தெரியவந்தது. பணத்திற்காக மேரியின் வீட்டில் பழுதாக இருந்த பைப்பை சரி செய்ய வந்தபோது, அவர் தனியாக இருப்பதை கவனித்து, கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி, நவம்பர் 26ஆம் தேதி மேரியை கொன்று, அவர் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் திருடினார். பின்னர், அவரது உடலை ஆட்டோவில் ஏற்றி, பெங்களூருவில் உள்ள ஹென்னூர் ஏரிக்கு அருகில் குப்பை மேட்டில் வீசி விட்டார். மேலும், போலீசாரை தவறான வழியில் அழைத்துச் செல்ல, மேரியின் மொபைல் போனை ஒரு குப்பை வேனில் போட்டு விட்டதாகவும், அதன் மூலம் விசாரணையை திசைதிருப்ப முயன்றதாகவும் தெரிகிறது.

முதலில், இந்தக் கொலை வழக்கில் போலீசார் லட்சுமணை சந்தேகிக்கவில்லை, ஏனெனில் அவர் அன்றைய தினம் தனது வீட்டிலேயே இருந்ததாக அவரது அழைப்புத் தரவுகள் (CDR) காட்டியது. ஆனால், மேரியின் மருமகள் மட்டும் அவரை சந்தேகிக்கத் தொடங்கினார், ஏனெனில் அன்றைய தினம் வீட்டிற்கு வந்த ஒரே நபர் அவரே. மேலும், லட்சுமண் சில நாட்கள் கழித்து மாயமாகிவிட்டதால், அவரது மீதான சந்தேகம் அதிகரித்தது. கடந்த மார்ச் 10ஆம் தேதி, மேரியின் மருமகளுக்கு லட்சுமண் இருப்பிடத்தைக் குறித்த தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Leave a Response