ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கட்சி தலைவர்கள் அனைவரும் தனித்தனியாக பிரிந்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் தொடர்ந்து அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இப்படியான நிலையில் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக நான், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினோம். அப்போது ஒற்றுமையாக இருக்குமாறு அமித்ஷா கூறினார்.
ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி காது கொடுத்து கேட்கவில்லை. அதன் விளைவு தான் இன்று அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு ஒன்றாக பயணிக்கலாம் என்று நானும் அமித்ஷாவும் எடப்பாடியிடம் கூறினோம். இதற்கு விருப்பமில்லை என்றால் பாஜகவுக்கு 20 தொகுதிகள் கூடுதலாக கொடுங்கள் அதை பாஜக அமமுகவுக்கு கொடுக்கும் என்று அமித்ஷா கூறினார். அதற்கும் ஒப்புக் கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி தொகுதிகளை குறைத்து கேட்ட போதும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நான் சொன்னால் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வார், ஆனால் அவருடைய கட்சிக்கு பத்து வாரிய தலைவர் பதவிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார். அதற்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அமித்ஷா அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். அன்று அவர் சொன்னதை கேட்டிருந்தால் அதிமுக தான் இன்று தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்திருக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.