நான் துரோகிகள் என்று கூறிய வார்த்தை அந்தியூருக்கு மட்டுமே சொந்தம் : செங்கோட்டையன்

முன்னாள் அதிமுக அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், ‘எதிரிகள் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது. அது எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. ஜெயலலிதாவின் மறு வடிவமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டலில் அமர்த்துவதற்காக ஒரு மாபெரும் தியாக வேள்வியை நடத்தி வருகிறார்’, என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டம் அத்தாணியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘அதிமுக இயக்கம் வளர எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ள தொண்டர்கள் வேறு எந்த இயக்கத்திலும் இல்லை. இந்த முறை தான் தோல்வியை தழுவியிருக்கிறோம். ஒரு சில துரோகிகளால் தான் அதிமுக தோல்வியை சந்திக்க நேரிட்டது’ என்றார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபி அருகே கே.ஏ.செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று காலையில் கூறிய கருத்திற்கு மாலை அவரே தெளிவாக பதிலை கூறிவிட்டார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை இதுவரை சேவல், புறா சின்னத்தில் தொடர்ந்து வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை தோல்வி அடைந்ததற்கு சில பேர் இந்த இயக்கத்திற்கு துரோகத்தை செய்ததால் தான். அதை நாம் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தான் சொன்னேன். அந்த வார்த்தை அந்தியூர் தொகுதிக்கு மட்டும்தான் பொருந்தும். இந்த இரண்டு நாள் பொதுக்கூட்டத்திலும் கழக எதிர்க்கட்சித் தலைவர், பொதுச்செயலாளர் என்று தான் நான் கூறியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response