அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டார். அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட பிறகு பெண்கள் அவரது கையை பிடித்து கதறி உள்ளனர். அதில் ஒரு பெண் நீங்க அடிச்சுக்காதீங்க. எங்களுக்கு அனுமதி கொடுங்க. நாங்க எங்களை சாட்டையால் அடித்துக் கொள்கிறோம் என பேசி உள்ளார். பின்னர் எங்கள் தலைவர் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்வது திருமாவளவனுக்கு கேலியாக இருக்கிறது. பெண்களின் நிலைமை என்ன கேலியாக உள்ளதா?
எங்கள் தலைவர் முதல்வராக இருந்திருந்தால் சம்பவம் நடந்த மறுநாளே குற்றவாளி உயிருடன் இருந்திருப்பாரா? எங்கள் தலைவரிடம் ஆட்சி பொறுப்பு இல்லை. அவரால் என்ன செய்ய முடியும். எவ்வளவு தூரம் போராட முடியும். அதனால் தான் அவர் தன்னை தானே வருத்திக் கொள்கிறார். பெண்கள் உணர்வுபூர்வமா அவரை தலைவரா ஏற்றுக் கொண்டோம். எங்க தலைவரோட ஒழுக்கத்திற்கு அவரால் சவால் விட முடியுமா? திராவிடத்தில் இருக்கிற அத்தனை தலைவர்களும் எங்கள் தலைவரின் ஒழுக்கத்திற்கு சவால் விட முடியுமா? என அந்த பெண் கேள்வி கேட்டுள்ளார்.
முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என தெரியவில்லை. செருப்பு அணிய மாட்டேன் சாட்டையால் அடிப்பேன் என முடிவு எடுக்கிறார். தன்னைத்தானே வருத்திக் கொள்கிறார். காந்தியடிகள் கூட இப்படி போராட்டங்களை அறிவித்தது கிடையாது. அவரது போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிட்டது என கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.