தெலுங்கானாவில் சாலையில் வண்டியில் சென்றவரை மெதுவாக போகும்படி அறிவுறுத்திய முதியவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அல்வால் பகுதியில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அன்றைய தினம் அல்வால் சாலையில் 65 வயதுள்ள முதியவர் ஆஞ்சநேயலு நடந்து சென்று கொண்டிருந்தார். முதியவர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாகச் சென்றுள்ளது. இதனால் பைக்கில் சென்றவரை மெதுவாக செல்லும்படி முதியவர் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் பைக்கை நிறுத்தி கீழே இறங்கி முதியவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
அந்த பைக்கில் வந்த நபருடன் அவரது மனைவியும், மகனும் உடன் வந்துள்ளனர். முதியவரைக் கீழ் தள்ளி அடித்துக் கொண்டிருந்த தனது கணவனை சமாதானப்படுத்தி மனைவி தடுக்க முயன்றுள்ளார். இருப்பினும் முதியவரைத் தாக்குவதை அந்த நபர் நிறுத்தவில்லை. சுற்றி இருந்தவர்கள் அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றுள்ளனர்.
https://x.com/hyderabadinlast/status/1847141865495077002?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1847141865495077002%7Ctwgr%5E7498f398440d0dbe5e8228a445cdabd54d07d7da%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
இறுதியில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.