செப்டம்பர் 20ம் தேதியன்று பெங்களூரு போகனஹள்ளியில் நடந்த விபத்து மற்றும் திருடு போனதாக கூறப்பட்ட சம்பவத்தில் 29 வயது இளம்பெண்ணின் பங்கை பெங்களூரு போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
கொள்ளையடித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஸ்ருதி என்ற பெண்ணைக் கைது செய்தனர். தனது அந்தரங்க புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்த முன்னாள் காதலனின் செல்போனைப் பறிக்க சில ஆண்களின் துணையுடன் ஸ்ருதி குற்றத்தை திட்டமிட்டு செயல்படுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தார். பெங்களூரு கொடாத்தி பகுதியில் வசிக்கும் ஸ்ருதியின் கூட்டாளிகளான மனோஜ் குமார், சுரேஷ் குமார், ஹொன்னப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகியோரையும் பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் விபத்து ஏற்பட்ட நிலையில், தன்னை ஒரு மர்ம கும்பல் தாக்கி விட்டு, தன்னிடம் இருந்து செல்போனையும் பறித்துச் சென்றதாக வம்சி கிருஷ்ணா என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், வம்சி கிருஷ்ணாவின் முன்னாள் காதலி ஸ்ருதி, பெயிண்டரான மனோஜ் உள்ளிட்டோரைக் கைது செய்தனர். மனோஜிடம் இந்த திருட்டைச் செய்ய ஸ்ருதி ரூ.1.1 லட்சம் பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.