சில நாட்கள் முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாடு, திருப்பதி லட்டில் மிருகத்தின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகவும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஜெகன்மோகன் ரெட்டி காரணம் என்று ஒரு பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்தத் திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திர அரசியலைத் தாண்டி தமிழகத்திலும் சில சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது. குறிப்பாக ஒரு யூடியூப் சேனலில் வெளியான வீடியோ தொடர்பாக தமிழக பாஜக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஆந்திர காவல்துறையில் முறையிட்டிருந்தது.
அதன்பின்னர் குறிப்பிட்ட அந்த லட்டு வீடியோவை சேனல் நிர்வாகம் நீக்கியது. அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை முன்கூட்டியே தரவிறக்கம் செய்து வைத்து சிலர் சமூக வலைத்தளத்தில் போட்டுப் பரப்ப ஆரம்பித்தனர். இதற்குப் பின்னால் திராவிட கட்சி ஆதரவாளர்கள் உள்ளனர் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நடிகை கஸ்தூரி, குறிப்பிட்ட வீடியோவை நீக்க வேண்டிக் கொடுக்கப்பட்ட அழுத்தம் தவறானது எனக் கண்டித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் ‘பரிதாபங்கள்’ போடக்கூடிய நகைச்சுவை வீடியோக்களின் அதிபயங்கர ரசிகை நான். கருத்துச் சுதந்திரத்திற்கு நான் மிகப்பெரிய ஆதரவாளர். நல்லது, கெட்டது, சென்சிடிவ் என ஏதுவாக இருந்தாலும் அதைப் பற்றி பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அப்படித்தான் ‘லட்டு’ காணொளியைப் பதிவேற்றி இருந்தார்கள். அது நன்றாகவே இருந்தது. லேசாக சைவம் சாப்பிடும் ஆட்களைக் கிண்டலடித்து இருந்தார்கள். அது சிலருக்குக் கோபத்தைக் கொடுத்து இருக்கலாம். வலதுசாரி ஆட்கள் அழுத்தம் கொடுத்து நீக்கி இருக்கலாம். நான் அவர்கள் வீடியோவை நீக்கவேண்டும் எனச் சொல்லவே இல்லை.
பொதுவாக ஒரு விசயம் பிடிக்கவில்லை என்று கருத்துச் சொல்லலாம். அதில் தவறில்லை. ஆனால், அதை நீக்கவேண்டும் என அழுத்தம் தரவே கூடாது. வரலாற்றிலேயே ‘பரிதாபங்கள்’ முதன்முறையாக ஒரு வீடியோவை நீக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தளவுக்கு அழுத்தம் தரப்பட்டது என்று தெரியவில்லை. வீடியோவை டெலிட் செய்ததும் அதை திராவிடியன் ஆட்கள் எடுத்து வேகமாகப் பரப்பி வருகிறார்கள். ‘பரிதாபங்கள்’ லட்டு விவகாரத்தை நக்கலடிப்பதைப் போல வேங்கை வயல் பிரச்சினை, லிப்ஸ்டிக் பிரச்சினை பற்றி எல்லாம் வீடியோ போட்டு விடமுடியுமா? என்ற கேள்வியும் இருக்கிறது. அப்படிப்போட்டால் என்ன ஆகும் தெரியுமா? அதற்குத் தைரியமிருக்கிறதா?
கார்த்தி கூட இந்த லட்டு விவகாரத்தில் தவறாக ஒன்றும் பேசிவிடவில்லை. அவரை நிகழ்ச்சி தொகுப்பாளினி வம்புக்கு இழுக்க முயன்றார். அதைச் சமாளிக்க நினைத்த கார்த்தி நக்கலாக சிரித்துவிட்டார். அவர் சிரிப்புதான் பிரச்சினை. அவரை தொடர்ந்து அரங்கமே சிரித்தது. அவர் பலமுறை மேடையில் கோபத்தைக் காட்டி இருக்கிறார். என் நிகழ்ச்சியில் கூட கோபப்பட்டுப் பேசியுள்ளார். அதைப் போல லட்டு விவகாரத்தில் அவர் பொறுப்பாகப் பதிலளித்திருக்க வேண்டும்.
இந்த லட்டு குண்டுவை எடுத்து முதலில் போட்டவர் சந்திரபாபு நாயுடுதான். அவர் என்ன சொன்னார்? எதற்குச் சொன்னார் என்பது யாருக்கும் புரியவில்லை. திருப்பதி தேவஸ்தானம் என்பது மிகப்பெரிய ஆலமரம். இந்த விவகாரத்தில் நாயுடு அவசரப்பட்டுப் பேசிவிட்டார் என்பது என் கருத்து. திருப்பதி பிரசாத விற்பனையில் மட்டும் கடந்த ஆண்டு 660 கோடி வருவாய் வந்துள்ளது. எனவே இது கோயில், ஆன்மிகம் என்பதைக் கடந்து அதிக வருமானம் தரும் வியாபாரமாகி விட்டது. கோயிலில் 16 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். தேவஸ்தானம் போர்டில் மட்டும் 2 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களை எல்லாம் மனதில் கொண்டு நாயுடு பேசி இருக்கவேண்டும்.
இந்த நெய் ஒப்பந்தம் 5 ஆண்டுகள் வரை விடப்படுவது இல்லை. 3 மாதத்திற்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்கக்கூடியது. 320 ரூபாய்க்கு இருந்த டெண்டரை மாற்றி நாயுடு 475 ரூபாய்க்கு நந்தினிக்கு வழங்கியுள்ளார். இந்த விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பார்கள் இல்லையா? அதைக் கேட்பதற்கு முன்பே லட்டு மீது புகார் கூறி நாயுடு ஊர்வாயை அடைத்திருக்கிறார். நாயுடுதான் ஆட்சியில் உள்ளார். புகார் வந்தால் விசாரணைக்கு உத்தரவிட்டு, அதன் அறிக்கை வந்த பிறகு சொல்லலாம். சட்டசபையில் இதைப் பற்றி கேள்வி எழுப்பி இருந்தால் அதற்குப் பதிலளிக்கும் போது நாயுடு கூறியிருக்க வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல் பொத்தாம் பொதுவாக கட்சிக் கூட்டத்தில் சொல்கிறார். இது எப்படி சரியாகும்?” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்து மதம்தான் பெரும்பான்மை இங்கே. அதைக் கிண்டலடித்தால் யாரும் கேட்கமாட்டார்கள். சிறுபான்மை சமூகம் பற்றி பரிதாபங்களை மாதிரி நக்கலடிக்க முடியாது. அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்பதும் நமக்குத் தெரியும். இங்கே இந்துக்களை யார் நக்கலடிக்கிறார்கள். பெரியாரிஸ்ட்டுகள் செய்கிறார்கள். அடுத்து அம்பேத்கரிஸ்ட்டுகள் செய்கிறார்கள். உண்மையான அம்பேத்கரிஸ்ட்டுகள் இதை செய்வதில்லை. சினிமாவை வைத்து பணம் சம்பாதிக்கக்கூடிய அம்பேத்கரிஸ்ட்டுகள்தான் செய்கிறார்கள். இதை சொல்வதற்காக வருந்துகிறேன். இந்து மதத்தை நக்கலடிக்கும் காரியத்தை சில இஸ்லாமியர்களும் செய்கிறார்கள்” என்று பேசியுள்ளார்