திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் தொடர்பாக, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் நிகழ்ந்துள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு நாடும் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
துணை முதலமைச்சர் என்ற பொறுப்புடன் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பேன் என்று களமிறங்காமல், ஏழுமலையானுக்கு அவமதிப்பு நிகழ்ந்துவிட்டதாக ஒரு பக்தரை போலவே பவன் கல்யாண் பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் எதிர்கருத்து கூறுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி, சனாதன தர்மம் தான் முதன்மையானது என்கிறார். இந்து தர்மத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சனாதன தர்ம வாரியம் அமைக்க வேண்டும் என ஜனசேனா கோரிக்கை விடுத்து வருகிறது. சனாதன தர்மத்தில் பவன் காட்டும் ஆர்வத்தை அவரது ரசிகர்களும் ,இந்துத்துவா தலைவர்களும் ஆதரித்து வரும் நிலையில், தென்னிந்திய அரசியலில் பவன் இந்துத்துவாவின் முகமாக மாற வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
தென்னிந்தியாவில், இந்துத்துவா அரசியலுக்கு ஒரு பிரபலமான முகம் தேவை என்பதை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உணர தவறின. ஆனால், தற்போது பாஜகவுடன் மிக நெருக்கமாக இருக்கும் பவன் கல்யாண் , அந்த இடைவெளியை நிரப்பும் முனைப்பில் இருப்பதாக தேசிய அளவிலான அரசியலில் பேசப்பட்டு வருகிறது.
பவன் கல்யாண் நேர்மையானவர் என ஒரு இமேஜை வைத்திருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி, லட்டு விவகாரத்தில் தனது நிலைப்பாடு ஆகியவற்றால் தென்னிந்திய அரசியலில் பவன் கல்யாணின் பெயர் மிகவும் பிரபலமாகியுள்ளது. அவர் இந்துத்துவ அரசியலின் எதிர்கால முகமாகவும் பார்க்கப்படுகிறார். இது பிஜேபியின் சூழ்ச்சியா அல்லது வியூகமா என்பது ஒருபுறமிருக்க, எதிர்கால தெற்கு அரசியலில் பவன் பங்கு ஒரு முக்கிய திருப்பத்தை எடுக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் மிகவும் வலுவாக உள்ளன.